
சென்னை மாவட்டம் தியாகராய நகர் ஆர்.கே புரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் தனது ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் கிருஷ்ண குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணகுமார் தான் ஏலம் சீட்டு நடத்தி வருவதாகவும், நீங்களும் இந்த சீட்டில் சேர்ந்தால் நல்ல தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனால் மூர்த்தியும், அவருக்கு தெரிந்த ஆட்டோ ஓட்டுநர்களும் சேர்ந்து பணத்தை கட்டியுள்ளனர். ஆனால் சீட்டு முடிந்த பிறகு கிருஷ்ணகுமார் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் தலைமறைவாகிவிட்டார்.
இதனால் மூர்த்தியும் பிற ஆட்டோ டிரைவர்களும் கிருஷ்ணகுமாரை தேடி சென்றனர். அப்போது அவர் உறவினர் ஒருவரது வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதனால் மூர்த்தியும் அவரது நண்பர்களும் உறவினர் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டனர். அப்போது கிருஷ்ணகுமார் பணத்தை கொடுக்காமல் நண்பர்களோடு இணைந்து மூர்த்தி உள்ளிட்டோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் இதுகுறித்து மூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ண குமாரை கைது செய்தனர். கிருஷ்ணகுமார் ஏல சீட்டு நடத்தி 40 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.