கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் சுந்தர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் முன்னாள் கவுன்சிலராக இருந்துள்ளார். இவர் தற்போது சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரூபா என்ற மனைவியும், கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் அவருடைய மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த மாணவி பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் காதலனை ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்து சுந்தர் உடனடியாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தார். தனக்கு அவர் ஒரே ஒரு மகள் என்பதால் வேறு வழியின்றி சுந்தர் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

இருப்பினும் காதல் திருமணம் செய்து கொண்ட தன் மகளின் முடிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததால் சரிவர யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் சுந்தர் நேற்று முன்தினம் இரவு மாடியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி அங்கு சென்று பார்த்தார். அவர் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு பார்த்தனர். அப்போது பிளேடால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சுந்தர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதாவது தன் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே சுந்தர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆரல்வாய்மொழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.