திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே எருமைக்குளம் பகுதியில் பிரபாகரன் (24)- புனிதா(18) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பிரபாகரன் மீனவர். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் உறவினர்கள் திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர். இதனால் இவர்கள் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று நேற்று முன்தினம் இரவும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு  ஏற்பட்ட நிலையில் பிரபாகரன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது புனிதா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் கதறி அழுதார். அதன் பிறகு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனால் அவரும் பரிதாபமாக இறந்தார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.