
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அனுபமா(20) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அனுபமாவிடம் நாகராஜும், அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனுபமா நேற்று முன்தினம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுபமாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அனுபமாவின் தாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார்.
எனவே நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.