கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகுல் மவுரியா (18) என்பவர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு எதிர்பாராத விதமாக ஒரு மிஸ்டு கால் வந்துள்ளது. அதன் மூலம் திருநங்கை ஒருவர் அறிமுகமானார். அவர் வாலிபரின் இளநீர் கடைக்கு வந்து நேரில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் ராகுலிடம் திருநங்கை தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ராகுல் அதை ஏற்க மறுத்த நிலையில் தொடர்ந்து தன் காதலை ஏற்குமாறு வாலிபருக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் ராகுல் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிவிட்டார். அவர் தன் தாயிடம் மட்டும் செல்போனில் பேசி வந்த நிலையில் தான் இருக்கும் இடத்தை கூறவில்லை. இந்நிலையில் அந்த திருநங்கை ராகுலின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடம் சண்டை போட்டுள்ளார். அவர் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்றார். இதை தெரிந்து கொண்ட திருநங்கை தன்னுடன் ஒரு பெண் மற்றும் சில திருநங்கைகளை அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்கள் ராகுலுக்கும் அந்த திருநங்கைக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கூறி பெற்றோரை மிரட்டியதோடு இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் போலீசில் புகார் கொடுப்போம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த ராகுல் நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராகுல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருநங்கையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.