மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 5-ம் தேதி ரயில்வே ஸ்டேஷனில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சூட்கேஸை கைப்பற்றினர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் சாதிக் அலி ஷேக் ‌(30). இந்த வழக்கில் ஜெய் பிரவீன் சாவாடா என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு குற்றவாளியான ஷிவ்ஜீத் சுரேந்திர சிங் தப்பி ஓடிவிட்டார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்ட போதிலும் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் குற்றவாளிக்கு வாய் பேசவும் தெரியாது காதும் கேட்காது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கான்ஸ்டபிள் ஆக வேலை பார்க்கும் ராஜேஷ் சத்புதேவ் என்பவருக்கு தெரியவந்தது.

இவருக்கு கௌரவ் சத்புதே (23) என்ற மகன் இருக்கிறார். இவருக்கு வாய் பேச முடியாது காதும் கேட்காது. இவரின் உதவியுடன் குற்றவாளியிடம் சைகை மொழியில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபர் உட்பட 3 பேர் நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலித்த நிலையில் அதில் ஏற்பட்ட தகராறில் தான் வாலிபரை கொலை செய்தனர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய ஷிவ்ஜீத்தை கைது செய்தனர். அதோடு சாதிக் அலியின் மனைவி ருக்ஸானா என்பவரையும் கைது செய்துள்ளனர். இவருக்கும் காது கேட்காது. மேலும் தீர்க்க முடியாத இந்த வழக்கில் காவலர் ஒருவரின் மகன் உதவியோடு பிரச்சினை தீர்க்க பட்ட நிலையில் அவருக்கும் அவருடைய மகனுக்கும் மேலதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.