
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் ஒரு பழங்குடியின வாலிபர் 2 பெண்களை காதலித்து ஒரே நேரத்தில் அந்த இரு பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதேபோன்று தெலுங்கானாவில் மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது அத்தேசாரா கிராமத்தில் அத்ரம் சத்ருசாவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தார். அதுமட்டுமின்றி மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடனும் பழகி வந்தார்.
ஒரு வருடமாக அந்த பெண்ணையும் வாலிபர் காதலித்த நிலையில் இறுதியில் இரண்டாவது காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் முதல் காதலி அதிர்ச்சி அடைந்து புகார் கொடுத்தார். அந்தப் பெண் ஆலோசனை மையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் 2 பெண்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இரு பெண்களும் அதே வாலிபரை தான் திருமணம் செய்து கொள்வோம் என்று அடம் பிடித்தனர். இதற்கு இரு பெண்களின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அதே கிராமத்தில் இரு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளையும் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.