மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3-ம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி, பாஜக ஓபிசி அணியின் செல்லூர் மண்டல செயலாளராக இருந்தவர். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், மறு நாள் வரை காணாமல் போன நிலையில், நேற்று  காலை கூடல் புதூர் சர்ச் அருகே, அவரது உடல் காரில் இருந்து மூக்கில் நுரை வந்த நிலையில் மீட்கப்பட்டது. இந்த மரணம் தற்கொலையா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருப்பசாமியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என பாஜக நிர்வாகிகளும், குடும்பத்தினரும் விசாரணை முடியும் வரை உடலை பெற மறுத்துள்ளனர். இது குறித்து கூடல் புதூர் காவல்துறையினர், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உண்மையான காரணம் கண்டறிய வேண்டும் என கருப்பசாமியின் உறவினர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், கருப்பசாமி மதுபோதையில் இருந்ததாகவும், ஆனால் முழுமையான விசாரணைக்கு பின் மட்டுமே உண்மை வெளிவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.