
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் காரை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று உள்ளார். அவருடைய கார் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும் காருக்குள் அதிக அளவில் மண்டை ஓடுகள் காணப்பட்டதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.
அது மட்டுமல்லாமல் காரின் முன் பகுதியில் நம்பர் பிளேட்டின் முன்னால் ஒரு பிளேட் தொங்கவிடப்பட்டு அந்த பிளேட்டில் அகோரி நாகசாகி என எழுதப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் மாந்திரீகம் செய்யும் மந்திரவாதிகள் திருவண்ணாமலைக்கு வந்திருப்பதாக தகவல் பரவி மக்கள் கூட்டம் கூடியது. உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய வாரணாசியில் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் கார் போக்குவரத்திற்கு இடையூறாக நின்றிருந்ததாக கூறி மூவாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.