இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு சம்பவம் கார்கில் போர். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 1991 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் உள்ள கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியது தெரியவந்த நிலையில், இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்தனர். கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி கார்கில் போரின் 25வது வருட வெற்றி தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரை கார்கில் நடந்த போருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பாகிஸ்தான் கூறி வந்த நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் இந்தியாவுக்குள் ஊடுருவியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதாவது ராவல்பிண்டி பகுதியில் நேற்று நடந்த பாதுகாப்பு தின விழாவில் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ ஜெனரல் அசீம் முனீர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவுடன் நடந்த பல்வேறு போர்களில் தாய் நாட்டை காக்க பல பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பாகிஸ்தான் ஒரு துணிச்சலான மற்றும் வீரம் நிறைந்த நாடு என்பதில் சந்தேகம் இல்லை. நாட்டின் சுதந்திரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது தெரியும். கடந்த 1948 ஆம் ஆண்டு, கடந்த 1965 ஆம் ஆண்டு, கடந்த 1971 ஆம் ஆண்டு, கார்கில் போர் மற்றும் சியாச்சின் போர்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும் கௌரவத்துக்காகவும் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்று கூறினார். மேலும் இதன் மூலம் கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியாவுக்குள் ஊடுருவியதை முதல் முறையாக அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது..