தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு தானிய விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை எடுத்து நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுதானிய திருவிழா கொண்டாடப்படுகிறது.

நம் முன்னோர்களால் ஆதி காலத்தில் இருந்து சிறு தானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறு தானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, திணை, வரகு, சாமை, கம்பு, பணி வரகு, சோளம் போன்ற பாரம்பரிய சிறுதானிய வகைகளை உலக மக்களிடையே பிரபலப்படுத்தும் விதமாக 193 ஐநா சபையின் உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்தது. அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டு சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐநா அறிவித்தது.

நமது உடலுக்கு நன்மை பயக்கும் பல உணவு வகைகளை காலப்போக்கில் மறந்து விட்டோம். சிறு தானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவ குணங்கள் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் ஆக்ஸிஜனேற்ற எதிர் பொருட்களும் இருக்கிறது. அவற்றை உட்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.