
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தை நிறுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்த போதிலும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் முசாபராபாத் பகுதிக்கு துணை ராணுவ வீரர்களின் வாகனம் சென்றுள்ளது. அப்போது போராட்டக்காரர்கள் வாகனத்தை நிறுத்தி கற்களை வீசி எறிந்துள்ளனர்.
உடனடியாக ராணுவ வீரர்கள் பொதுமக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதோடு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பொதுமக்கள் உயிரிழந்ததோடு 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இணைய சேவை அந்த பகுதியில் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.