
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது, காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. உலக நாடுகள், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இதன் தாக்கம் காரணமாக சவுதி அரேபிய பயணத்தில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது திட்டத்தை மாற்றி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவிலேயே இந்தியாவிற்கு திரும்புகிறார். அவரின் திட்டமிடப்பட்ட இரவு விருந்தும் ரத்தாகியுள்ளது.
தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, “இந்த கொடூர தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் தீய சக்திகள் தப்பிக்க முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போர் மேலும் தீவிரமாகும்” எனக் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசிய அவர், சம்பவ இடத்திற்கு நேரில் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். அதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உடனடியாக 24×7 கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் சுற்றுலா மேசைகளை இயக்கத்தில் கொண்டு வந்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதோடு, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.