தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மற்றும் மத்தியிலாலும் பாஜக அரசு இடையே சமீப காலமாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் ரீதியான மோதலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்ணாமலை உதயநிதியை விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி அண்ணாமலைக்கு சவால் விடுவதும் என மாறி மாறி தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

இப்படியான நிலையில் சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, உண்மையிலேயே அண்ணாமலைக்கு தெம்பு, தைரியம் இருந்தால் தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் உள்ள அறிவாலயத்தின் ஒரு செங்கலை தொட்டுப் பார்க்கட்டும். முடிந்தால் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தை தொட்டுப் பார்க்க சொல்லுங்கள். கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் எல்லாம் உளறுவதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.