
சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சீனிவாசன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மங்கள லட்சுமி (30) என்ற மனைவியும் தஷ்வந்த் (8) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மங்கள லட்சுமி ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சீனிவாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அதேபோன்று நேற்று முன்தினமும் வழக்கம் போல அவர் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மங்களலட்சுமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மங்கள லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.