
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பின்பல்ஹடாவில் ரொடு சிங், சுகுனா பாய் (40) எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்த்திக் (3) என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு, ரொடு சிங் சுகுணா பாயை தாக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் சுகுனாவை, ரொடு சிங் தாக்கியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சுகுனா தனது 4 பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு அன்று இரவு ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலையில் ஊரில் இருந்த கிணற்றில் தனது நான்கு பிள்ளைகளுடனும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் சுகுனாவின் குழந்தைகள் 4 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுகனா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் நான்கு குழந்தைகளின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.