கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் முனகல் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருடைய மனைவி அன்னபூரணி. இவருடைய தந்தை பசவ ராஜப்பா, தாய் கவிதா. அன்னபூரணியும் நவீனம் காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நவீன் அடிக்கடி சண்டை போட்டு தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் தனது குழந்தையுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு அன்னபூரணி பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்களாக மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர நவீன் முயற்சி செய்த நிலையில் நேற்று முன்தினம் அன்னபூரணி தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் அழைத்துக் கொண்டு நவீனின் வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு அவர்களை பஸ் ஏற்றி விட நவீன் தன்னுடைய காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவர்களுடன் அன்னபூரணியும் சென்ற நிலையில் வழியிலேயே நவீன் தனது மாமனார் மாமியாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய பெற்றோருக்கு ஆதரவாக அன்னபூரணி பேசிய நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நவீன் தனது காரில் வைத்திருந்த இரும்பு கம்பியால் மனைவி, மாமனார் மாமியாரை கொடூரமாக தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

மூன்று பேரும் இதில் உயிரிழந்த நிலையில் உடல்களை கொண்டு சென்று அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான நவீனை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.