
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 14,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது. அதோடு பற்றாக்குறைக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கும் நிலையில் பிற பகுதிகளில் இருந்தும் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் சேர்ந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. தற்போது சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து 2500க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுபோக பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மட்டும் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.