
கத்தோலிக்க மதத்தின் 266-வது தலைவராக இருந்து, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கிய போப் பிரான்சிஸ், தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நிமோனியா, இரத்த சோகை மற்றும் நுரையீரல் கோளாறுகள் காரணமாக சிகிச்சையில் இருந்த அவர், பிப்ரவரி 14ஆம் தேதி ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மரணம் உலகம் முழுவதும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போப் புனிதர் மட்டுமல்ல, பலவித அனுபவங்களைக் கொண்டவர். போப் பிரான்சிஸின் உண்மையான பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. 1936 ஆம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டினாவில் பிறந்த அவர், இத்தாலிய குடியேறிகளின் மகனாக இருந்தார். இவர் குத்துச்சண்டை வீரராக இருந்ததோடு ஆசிரியராகவும் இருந்துள்ளார். அதுமட்டுமின்ற ஒருகாலத்தில் ஒரு இரவு விடுதியில் பாதுகாவலராகவும், ரசாயன ஆய்வகத்தில் பணியாளராகவும், பின்னர் இலக்கியம் மற்றும் உளவியல் ஆசிரியராகவும் பணியாற்றியவர். 21வது வயதில் ஜேசுட் சமூகத்தில் சேர்ந்த அவர், 2001ஆம் ஆண்டு கார்டினலாக நியமிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போப்பாக ஆன பிறகு, பல பாரம்பரியங்களை ஒதுக்கி விட்டு, எளிமையான வாழ்க்கையை முன்னிலைப்படுத்தியவர். வாடிகானில் உள்ள ஆடம்பரமான அப்போஸ்தலிக் அரண்மனையை தவிர்த்து, செயிண்ட் மார்த்தா விருந்தினர் மாளிகையில் தங்கி, பக்தியுடன் வாழ்ந்தார். தங்க ‘மீனவரின் மோதிரத்திற்கு’ பதிலாக வெள்ளி மோதிரம் அணிந்தார். பேராயராக இருந்த போதும், பொதுப் பேருந்து மற்றும் மெட்ரோவில்தான் பயணம் செய்தவர், மக்கள் மத்தியில் இருந்த தலைவர்.
போப்பின் மிகச் சிறப்பான செயல்களில் ஒன்று, 2024ஆம் ஆண்டு ஈஸ்டர் விழாவுக்கு முன்னதாக ரோம் சிறையில் பெண்களின் கால்களைக் கழுவிய நிகழ்வு. இது கத்தோலிக்க வரலாற்றில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அடிப்படையில், ஏழை மக்களிடையே பணிந்து சேவை செய்யும் போப்பின் சிந்தனையை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.
போப் பிரான்சிஸ் – ஒரு தலைவராக மட்டுமல்லாமல், மனித நேயத்தின் எதிரொலியாகவும், மத நல்லிணக்கத்தின் தூதராகவும், எளிமையின் ஒளியாகவும் வாழ்ந்தவர். அவரது மறைவு, ஆன்மீக உலகத்தில் ஒரு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது.