விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீனிவாசன்(40) என்பவர் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சீனிவாசன் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 3 நபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனால் சீனிவாசன் அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்தனர். உடனே சீனிவாசனும் அவருடன் பணியில் இருந்த முதல் நிலை காவலர் மஞ்சுநாதனும்(35) இணைந்து இரண்டு பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தப்பி ஓடிய ஒருவரை பிடிக்க தேடி சென்றனர். அந்த நபர் ஆவுடையார்பட்டு கிராமம் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். உடனே சீனிவாசகம் மஞ்சுநாதனும் அவரை விரட்டி சென்றனர். அப்போது திடீரென சீனிவாசன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மஞ்சுநாதன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சீனிவாசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.