
திருச்சி மாவட்டத்தில் உள்ள மன்னச்சநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக கிருத்திகா (35) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சாய் நந்தினி (11) என்ற மகளும், கோகுல் நாத் (14) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கிருத்திகா மகளிர் சுய உதவிக் குழு மூலமாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருத்திகா தன் குழந்தைகள் இருவருடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மறுநாள் அதிகாலை கணவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி உட்பட குழந்தைகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக மன்னச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூவரின் சடலத்தையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்றுவிட்டு கிருத்திகாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.