ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹார்பர் பூங்காவில் சிலர் குழந்தையை விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 மாத குழந்தையை 2 பேர் விற்க முயன்றுள்ளனர். இதை பார்த்த காவல்துறையினர் அந்த 2 நபர்களை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 15 மாத குழந்தையை கடத்தியுள்ளார். அதன்பின் அந்த குழந்தையை அவர் விசாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்து இடைத்தரகர் மூலம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த 2 நபர்களிடம் இரண்டாம் கட்ட விசாரணை காவல்துறையினர் நடத்தினர். அதில் அனக்கா பள்ளி, பெத்தனாவா, அச்யுதாபுரம் மற்றும் ஒடிசாவில் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் தனிக்குழு அமைத்து அங்கு சென்று சுமார் 17 நபர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் கடத்தப்படும் குழந்தைகளை ரூபாய் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட்டுள்ளனர்.