
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபர் 20 வயது இளம்பெண்ணை காதலித்தார். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் வாலிபருக்கு கேரளாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் குழந்தையை தனியாக விட்டு விட்டு வேலைக்கு சென்றார். அந்த பெண் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசி பொழுதை கழித்து வந்தார்.
இந்த நிலையில் இளம்பெண் தனியாக இருப்பதை 2 பேர் நோட்டமிட்டனர். கடந்த 19ஆம் தேதி கதவை தாழ்ப்பாள் போடாமல் இளம்பெண் தனது குழந்தைக்கு பால் புகட்டி கொண்டிருந்தார். அப்போது அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இரண்டு பேர் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து அந்த பெண்ணை மிரட்டி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை வெளியே சொன்னால் உனது குழந்தை உட்பட குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் அச்சத்தில் அந்த பெண் வீட்டுக்குள்ளேயே இருந்தார்.
நள்ளிரவு 1.30 மணிக்கு மீண்டும் அந்த இரண்டு பேர் வந்து கதவை தட்டியுள்ளனர். யார் என்ன பார்ப்பதற்காக இளம்பெண் மெல்ல கதவை திறந்தார். அப்போது அவர்கள் கதவைத் தள்ளி கொண்டு அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து மீண்டும் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் இளம்பெண் சோகமாகவே இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கேரளாவில் இருக்கும் அவரது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனால் இளம்பெண்ணின் கணவர் ஊருக்கு வந்து தனது மனைவியிடம் விசாரித்தார். அப்போது தனக்கு நடந்த கொடுமைகளை கூறி வாழவே பிடிக்கவில்லை என்று கதறி அழுதார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறி கொள்ளையர்களான மாரியப்பன் (28), மாரி செல்வம் (27) ஆகியோர் இணைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.