இந்திய அளவில் ஒரு நூதன மோசடி பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த மோசடி கும்பல் நவாடா மாவட்டத்தை ‌ மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை வெளியிட்டனர். அதில் குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பம் ஆக்கினால் பத்து லட்ச ரூபாய் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்கள் கர்ப்பமாகவில்லை என்றால் கூட 50 ஆயிரம் முதல் 5 லட்ச ரூபாய் வரையில் பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நம்பிய பலர் அவர்களுக்கு தொடர்பு கொண்ட போது அவர்களிடமிருந்து பான் கார்டு, ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை வாங்கியுள்ளனர். அதோடு ஹோட்டல் அறை கட்டணம் மற்றும் முன்பதிவு கட்டணம் என்றெல்லாம் கூறியும் பணம் பறித்துள்ளனர். இதில் சில வாடிக்கையாளர்களிடம் புகைப்படங்களை வாங்கிக்கொண்டு அதனை மார்பிங் செய்தும் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி இந்திய அளவில் நடந்துள்ளது தெரியவந்துள்ள நிலையில் போலோகுமார், ராகுல் குமார் மற்றும் பிரின்ஸ் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.