
தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வைத்தே தன்னுடைய துறைக்கு போதிய அதிகாரமும் கிடையாது நிதியும் கிடையாது என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அவர் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியானது. அதாவது நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் ஊழல் செய்துள்ளதாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருடைய இலாகா பறிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்த சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தன்னுடைய துறைக்கு அதிகாரம் கிடையாது என்று அவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா இல்லை எனில் ஜாமின் வேண்டுமா என கெடு வைத்துள்ளது. அவர் திங்கள்கிழமை இது தொடர்பாக பதில் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக செந்தில் பாலாஜியின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறையை கூடுதலாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.