
இத்தாலி நாட்டின் தலைநகர் ரோம் அருகே லட்டினா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான புலம்பெயர் இந்திய தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் அங்கு பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் அங்குள்ள ஒரு வயல்வெளியில் சத்னம் சிங் (31) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் இந்திய தொழிலாளி. இவர் வைக்கோல் வெட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் கை சிக்கி துண்டானது.
இதனால் வலியில் அலறி துடித்த அவரை வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டின் அருகே உள்ள சாலையில் அவரை வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சத்னம் சிங்கை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்திற்கு இத்தாலி நாட்டின் எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்நாட்டின் தொழிலாளர் துறை மந்திரி இப்படிப்பட்ட கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.