
ஒடிசா மாநிலத்தின் பாட்லியா கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 65 வயதான மந்த் சோரன் என்ற மூதாட்டி, தனது 7 வயது பேரனை ரூ.200க்கு ஒரு தம்பதியரிடம் ஒப்படைத்துள்ளார். வறுமையின் பிடியில் சிக்கிய மூதாட்டி, தன்னால் அந்த சிறுவனை உணவு, கல்வி, வசதிகளுடன் கவனிக்க இயலாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து, சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி சோரனின் கணவர் ஏற்கனவே உயிரிழந்தார், மகன் காணாமல் போய் விட்டார். மருமகள் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துவிட்டார். ஆதரவின்றி வசிக்கும் மந்த் சோரன், தன் சகோதரியின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆனால் சகோதரியின் பொருளாதார நிலை மோசமாக இருந்ததால், மூதாட்டி மற்றும் சிறுவனைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த மூதாட்டி தன் பேரனை பாதுகாப்பாக பார்த்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பேரனை அந்த தம்பதியரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரின் புகாரின் பேரில், அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை உறுதியாக செயல்பட்டு, சிறுவனை மீட்டுள்ளனர். மூதாட்டிக்கு தேவையான ஆதரவுகளை அரசு வழங்க வேண்டும் என உள்ளூர்வாசிகள் கேட்டுள்ளனர். அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.