
சென்னை பெரவளூர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 26) என்பவர், தனது நண்பரான பெங்காலி என்பவருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின்னர் சந்துரு, மற்றொரு நண்பரான சந்தோஷுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அதே இடத்திற்கு வந்த பெங்காலி, திடீரென சந்துருவை கத்தியால் குத்தி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் துடிதுடித்த நிலையில் இருந்த சந்துருவை அருகிலுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் அதற்குள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரவளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பெங்காலியை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.