
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் நேற்று 98.5 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் கணேசன் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று ஆதார் அட்டையில் கைரேகையை புதுப்பிப்பதற்காக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.
இவர் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அவர் கடுமையான வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா இல்லையெனில் வேறு ஏதேனும் உடல்நல குறைவா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.