விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி உள்ளது. இங்கு கருப்பசாமி (35)-பாண்டி செல்வி (33)0 தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் கருப்பசாமி ஜேசிபி வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரை நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கருப்பசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஜீவா, ஆனந்த், பால்பாண்டி, வீரபாலன் மற்றும் ராமர் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் கடந்த 5-ம் தேதி ஒரு கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த கருப்பசாமிக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக பேசி முடிவெடுக்கலாம் என ராமர் கருப்பசாமியை சம்பவ நாளில் அழைத்து சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.