தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட கடலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மீண்டும் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி அருகே ராஜன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதோடு  மாணவ மாணவிகளுக்கு யோகாவும் கற்றுக் கொடுத்துள்ளார். இதில் யோகா பயிற்சியின் போது மாணவிகளிடம் மிகவும் தகாத முறையில் ராஜன் நடந்து கொண்டதோடு அவர்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுத்த நிலையில் பள்ளியின் முதல்வர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் ராஜனை பிடித்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்ததால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் கோயம்புத்தூரில் சமீபத்தில் ஒரு 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கம் அடங்காததற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.