டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பரவுவது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் அதுபோலவே மற்றொரு பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட சண்டை கடும் வன்முறையாக மாறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் சட்டை முழுவதும் கிழிந்து, மூச்சு விடாத வாக்குவாதத்துடன் தனது எதிர்ப்பாளியை “வா பா… சண்டை பண்ணலாம்” என சீறி சண்டையை மேலும் தீவிரப்படுத்துகிறார். அந்த நேரத்தில் ஒரு பெண் பயணி ஒருவர் நடுநடுவே தலையிட்டு அவர்களை அமைதிப் படுத்த முயன்றும், அவர்களின் கோபத்தை அடக்க முடியவில்லை.

 

இந்த சண்டையின் காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், இது டெல்லி மெட்ரோவில் நிகழும் முதல் சம்பவம் அல்ல. முன்பும் இடவசதி பிரச்சனை, மோசமான பேச்சுவழக்கம் போன்ற காரணங்களால் பயணிகள் இடையே சண்டை வெடித்துள்ளன. வீடியோ இறுதியில், இருவரும் தங்களது கோபத்தைக் கட்டுப்படுத்தி இடைவெளியுடன் அமர்வதைக் காணலாம். சட்டை கிழிக்கப்பட்ட இளைஞர் தன்னுடைய உடையைச் சரி செய்து, தொப்பியை அணிந்து அமைதியாக இருப்பது போல நடிக்கிறார். இந்த சம்பவம் குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் இன்னும் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.