புனேவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சொந்தமான மினிபேருந்தில் பயணம் செய்த 14 பேரில் நால்வர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நிகழ்ந்ததிலிருந்து ஒரு நாள் கழித்து, போலீசார் இதுவொன்றும் விபத்து அல்ல, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட தீவைத்தல் என உறுதி செய்துள்ளனர். குற்றவாளியான டிரைவர் ஜனார்தன் ஹாம்பர்டேகர், ஊதியம் குறைக்கப்பட்டதற்கும், பணியாளர்களுடன் ஏற்பட்ட தகராறுக்கும் பழிவாங்கும் நோக்கில் இந்த செயலை மேற்கொண்டதாக வாக்குமூலம்  கொடுத்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, ஹிஞ்சவாடி பகுதியில் பஸ்  சென்று கொண்டிருந்த போது ஹாம்பர்டேகர் பென்சீன் என்ற எளிதில் எரியும் திரவத்தை கொண்டு வந்து, டோனர் தூள் துடைக்கும் துணியை அதில் நனைத்து வைத்துள்ளார். பிறகு பஸ்சில் இருக்கும் போதே அவர் யாருக்கும் தெரியாமல்  தீ வைத்துள்ளார். இதில்பேருந்தின் முன்பகுதியிலிருந்து தீ எரிந்து வேகமாக பரவியது. பயணிகள் சிலர் பேருந்திலிருந்து குதித்து உயிர் பிழைத்த  நிலையில், சுபாஷ் போசாலே, சங்கர் சிண்டே, குருதாஸ் லோக்ரே மற்றும் ராஜூ சவான் எனும் நால்வர், பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்ததால், வெளியேற முடியாமல் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வுக்கு காரணமான ஹாம்பர்டேகர் சம்பவத்தின்போது பேருந்திலிருந்து குதித்து உயிர் தப்பினார். மேலும்  குற்றவாளியான ஹாம்பர்டேகர் தற்போது போலீசார் கைது செய்து காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.