
தமிழக பாஜக கட்சியின் சார்பில் நேற்றைய திமுக அரசை கண்டித்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, திமுக மேடைகளில் ஆபாச பேச்சு மட்டும் தான் இருக்கும். இதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள்.இதை வைத்துக்கொண்டு அடுத்து வரும் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று விடலாம் என்று திமுக கூறி வருகிறது. வட இந்தியர்கள் யாரும் தமிழர்களை பற்றி இழிவாக பேசுவது கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் அமைச்சர்கள் வட இந்தியர்களை பற்றி இழிவாக பேசுகிறார்கள்.
தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியைத் தாண்டி கொஞ்சம் நேரம் கிடைத்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, ரகுபதி மற்றும் காந்தி ஆகியோர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் எல்லோரும் தான் தற்போது தமிழ்நாட்டு குழந்தைகளின் கல்வி பற்றி பேசுகிறார்கள். அமைச்சரின் பெயர் மட்டும்தான் காந்தி ஆனால் அவர் கடந்த 1990 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் காய்ச்சி குண்டாஸ் சட்டத்தில் சிறைக்கு சென்றவர்.
அடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறைக்கு சென்ற நிலையில் இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்கு அவர் சிறைக்கு செல்வார். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் சேகர்பாபு. அவர் இன்று அறநிலையத்துறை அமைச்சராக இருக்கிறார். திமுகவில் யாருமே படித்துவிட்டு அதிகாரத்திற்கு வரவில்லை. இன்று கூட்டு களவாணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் குழந்தைகளின் கல்வியை தீர்மானிக்கிறார்கள். கர்மவீரர் காமராஜர் மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். மேலும் சிறைக்கு சென்றவர்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் இன்று கல்விக் கொள்கையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.