தமிழகத்தில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மைக் சின்னத்தில் போட்டுயிடும் டாக்டர் அபிநயாவுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் திருவாமத்தூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் கடந்த 10 நாட்களாக சாராயத்தை தவிர வேறு எதைப் பற்றியும் அங்கு பேசவில்லை.

இது சட்டசபையா அல்லது சாராய சபையா என்பது சந்தேகமாக இருக்கிறது. அதன்பிறகு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயரிழந்தவர்களுக்கு ரூ‌.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களுக்கு ரூ.25,000 தான் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களை விட கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் உயர்வானவர்களா.? இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது என்று கூறினார். மேலும் தமிழக மக்கள் இனியாவது விழித்துக் கொண்டு மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.