தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நீலகிரி செல்ல இருக்கிறார் அதனை தொடர்ந்து  கோயம்புத்தூருக்கு  செல்கிறார் . அங்கு கோவை கொடிசியா வளாகத்தில் 10,000 பெண்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணைத்தலைவர் பொதுச் செயலாளர் நித்தியானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் சென்ற ஆண்டு 16,000 பேர் பங்கேற்ற வள்ளி கும்மி நடனம் உலகக் கின்னஸ் சாதனை படைத்தது.

இந்த வள்ளி கும்மி ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு விழா வருகிற 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் உலக சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார். அதனுடன் இந்நிகழ்ச்சியில் 10000 பெண்கள் கலந்துகொள்ளும் வள்ளி கும்மி நடனத்தை பார்வையிடுகிறார்.

இந்த நாட்டுப்புறக் கலையை ஊக்குவிப்பதற்காக கொங்குநாடு கலைக்குழு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடன சாதனையை முறியடித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி கும்மி நடனம் கின்னஸ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.