
இந்திய நாட்டில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்தார். இவர் “சாத்தானின் வேதங்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ஒரு மதத்தை மட்டும் தவறாக சித்தரித்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய மூத்த தலைவரான கோமேனி சல்மான் ருஷ்டிக்கு மரணம் தண்டனை விதித்துள்ளார். மேலும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து ஈரானின் மூத்த தலைவர் கோமேனி உயிரிழந்த பின்னர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை திரும்ப பெறப்பட்டது. ஆனால் அவருடைய உயிருக்கு தொடர்ந்த அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் ருஷ்டி பங்கேற்றுள்ளார். அப்போது அமெரிக்க இளைஞரான ஹாதி மாதர் தனது கையில் இருந்த கத்தியால் சல்மான் ருஷ்டி கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண் பார்வை பறிபோயும் ஒரு கை செயலிழந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனை அடுத்து அந்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். இந்த நிலையில் சல்மான் ருஷ்டியை தாக்கிய ஹாதி மாதர் என்ற இளைஞருக்கு ஈரான் அரசு ஆயிரம் சதுர மீட்டர் விவசாய நிலத்தை பரிசாக வழங்கியுள்ளது.
இது குறித்த ஈரானின் மரண தண்டனை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பின் செயலர் முகமது இஸ்மாயில் ஜயிரே கூறியதாவது “சல்மான் ருஷ்டிக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது. அவர் உயிரோடு இருந்தும் இனிமேல் எந்த பயனும் இல்லை. அவருக்கு தண்டனை கொடுத்த இளைஞருக்கு ஆயிரம் சதுர மீட்டர் விவசாய நிலம் பரிசாக வழங்கப்படும். அவர் இல்லாவிட்டாலும் அவருடைய வாரிசுக்கு இந்த நிலம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.