
சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா (22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சின்னமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் அனிதாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் வாலிபர் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்ததால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமண கோலத்தில் தன் காதலன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன வேதனைக்கு ஆளானார். இந்நிலையில் நேற்று முன்தினம் அனிதா நிறுவனத்தில் இருந்து மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது அறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது அனிதா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அனிதாவின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.