வேலூரில் அரசு பஸ்சில் பயணம் செய்த வியாபாரி ஒருவர், தனது வியாபாரத்தில் பெற்ற ரூ.5 லட்சம் பணத்துடன் பயணம் செய்தபோது, அந்தப் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார்(40) என்பவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.

கடந்த 13ம் தேதி இரவு, திருப்பதியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்வதற்காக அரசு விரைவு பஸ்சில் பயணம் செய்த அவர், வேலூர் புது பஸ்ஸ்டாண்டில் இடைநிறுத்தத்தில் டிபன் சாப்பிடுவதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிய போது, தனது பணப்பையை பஸ்ஸில் வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டார்.

அப்போது அதே பஸ்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், செல்வகுமாரின் பணப்பையை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்ததையடுத்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதாவது திருடிய நபர் டிக்கெட் எடுக்க ஜிபேவில் பணம் அனுப்பியுள்ளார்.  ஜிபே பண பரிவர்த்தனை மூலம் திருட்டில் ஈடுபட்டவரின் செல்போன் எண் கிடைக்கப்பெற்றது. அதன் டவர் லொக்கேஷன் அடிப்படையில், குற்றவாளி தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த கதிர்வேல் (28) என்பவர் என உறுதி செய்யப்பட்டது.

பின்னர், தனிப்படை அமைத்து சேலம் வழியாக கரூர் நோக்கி சென்ற கதிர்வேலை 9 மணி நேரத்துக்குள் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் போலீசாரின் விரைவான செயல்பாடு, குற்றவாளியை சிக்கவைத்து பணத்தை மீட்டதற்காக பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.