சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது துபாய் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையே இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த முகமது ஷமி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய நிலையில் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்‌‌. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான முறையில் விளையாடிய நிலையில் தற்போது இஸ்லாமிய மதகுரு ஒருவர் சொன்ன கருத்து சர்ச்சையாக மாறியுள்ளது.

அதாவது ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் முகமது ஷமி நோன்பு வைக்காமல் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி பாவம் செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அதாவது ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல், குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், எந்த ஒரு தவறும் செய்யாமல் நோன்பு கடைப்பிடிப்பார்கள். அதே சமயத்தில் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது‌.

இந்த நிலையில் முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது நோன்பு வைக்காமல் விளையாடினார். அவருடைய சிறப்பான ஆட்டமும் இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். இப்படி இருக்கும் போது அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, நோன்பு கடைபிடிக்காமல் ஷமி விளையாடியது தவறு என்று கூறியுள்ளார். அவர் நோன்பு கடைபிடிக்காமல் விளையாடி மிகப்பெரிய பாவத்தை செய்து விட்டார். அவர் போட்டியின் போது குடிநீர் குடித்து இருக்கிறார்‌. இவர் பாவம் செய்ததால் கண்டிப்பாக இறைவனிடம் அதற்கு பதில் சொல்லியே  ஆக வேண்டும் என்று கூறினார். மேலும் இவரின் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்களே பலர் கண்டனம்  தெரிவித்து வருகிறார்கள்.