
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்தார்.
இதனை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த மின்சார வாரிய அதிகாரியான சுரேஷ்குமார் என்பவர் மணிகண்டனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனையடுத்து மணிகண்டனின் பேச்சை நம்பி சுரேஷ் குமார், அவரது சகோதரர் மகேஷ் குமார் 54.60 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
அதன் பிறகு சிறிய தொகை லாபம் கிடைத்தது. இதனை நம்பி சுரேஷ்குமார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி அபிராமியின் வங்கி கணக்கிற்கு கூடுதலாக பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு கூறியபடி பணம் எதுவும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ்குமார் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டன் அவரது மனைவியை அபிராமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.