
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கணேசன் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், வினோத் குமார் (35) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வினோத்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தன் தந்தையிடம் சிகரெட் வாங்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்த நிலையில் கடைக்காரரும் பணம் இல்லாமல் சிகரெட் தர முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் கோபத்தில் வீட்டிற்கு வந்தார். அதன் பிறகு தன் தந்தை என்றும் பாராமல் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு வினோத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த வினோத்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.