ரஜினி ஸ்டைலில்  போஸ் கொடுத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் தல தோனி..

2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் அனைவருக்கும் நினைவிருக்கிறது, இப்படத்தில் அவர் கோட் அணிந்து நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு இருப்பார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும் அதே ஸ்டைலில் போஸ் கொடுத்திருந்தார். அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தோனி பகிர்ந்தார். இந்த புகைப்படம் வைரலாகி லைக்குகளை அள்ளியது. இந்த நிலையில் இதுகுறித்து தோனியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தோனி கூறியதாவது, இதில் எந்த ஒப்பீடும் இல்லை. ஒரு பெரிய மனிதனின் சிறந்த போஸை நகலெடுக்க முயற்சித்தேன். அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறொன்றுமில்லை. ஏனென்றால் அவரைப் போல் சிந்தித்து செயல்படுவது மிகவும் கடினம். இருப்பினும், அவரது போஸையாவது செய்து பார்க்கலாம் என முயற்சித்தேன், ”என்று  கூறினார். உங்களைப் போல் யோசிப்பது மிகவும் கடினம் என்ற கேள்விக்கு, ‘ களத்தில் வேண்டுமானால் இருக்கலாம்’ என்று மிக எளிமையான பதிலை அளித்துள்ளார் தோனி.

தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் விளையாடி 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னை அணி வெள்ளிக்கிழமை ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது, இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.