பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி சுக்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிர்ச்சியூட்டும் உரை நிகழ்த்தினார். அதாவது “சிந்து நதி எங்களுடையது, எங்களுடையதாகவே இருக்கும்; இல்லாவிட்டால் அவர்களின் இரத்தம் பாயும்” என பிலாவல் கூறியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடும் பதிலடி வழங்கினார். “தண்ணீர் இல்லாமல் அவர் எப்படி இருப்பார் என்று பார்ப்போம். இத்தகைய ஆக்கிரமிப்பு பேச்சுகளை மதிக்க வேண்டாம்,” என்று பூரி கூறினார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், இப்போது அவர்கள் அதிக விலை செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், பாகிஸ்தான் ஒரு முரட்டு நாடு மட்டுமல்ல, வீழ்ச்சி அடையும் நிலைக்கு சென்றுவிட்டது என்றும் ஹர்தீப் பூரி கருத்து தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ ஆலோசகர் கர்னல் தைமூர் ரஹத் லண்டனில் செய்த கழுத்தை அறுக்கும் சைகையையும் அவர் கண்டனம் செய்தார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உளவுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கு பதிலடியாக பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் மற்றும் பிற இருதரப்பு ஒப்பந்தங்களை நிறுத்தியது. இந்திய விமான நிறுவனங்களுக்கு வான்வெளி மூடல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை இஸ்லாமாபாத் அறிவித்தது.

1972ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி சுல்பிகர் அலி பூட்டோ இடையே கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான முக்கியமான துறையில் இருந்தது. தற்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் உரையாற்றிய போது, பஹல்காம் தாக்குதலுக்கு நடுநிலை விசாரணை நடத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். “நிரந்தர பழி சுமத்தும் விளையாட்டு முடிவுக்கு வர வேண்டும்,” என்று அவர் கூறினார். ஆனால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.