
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்கள் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது.
இதுகுறித்து மாணவியரின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று மாணவர்களையும் கைது செய்தனர். கடந்த மாதம் 22-ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன் மற்றும் பானுப்ரியா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இந்த விஷயத்தை வெளியே கூறாமல் அப்படியே மறைத்து விட்டனர். இதனால் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.