திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் பிரித்திகா அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவரது வீட்டில் உள்ள குழந்தைகளுடன் பிரித்திகா விளையாடுவது வழக்கம்.

அப்போது செல்வத்தின் தாய் குருவம்மாள் இங்கு வந்து என் பேரன் பேத்திகளுடன் விளையாட கூடாது என சிறுமியை கண்டித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வம் தனது குடும்பத்தினருடன் ஈஷா மையத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

இதனை அறியாத பிரித்திகா விளையாடுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மூதாட்டி உன்னை இங்கு வரக்கூடாது என சொல்லி இருக்கிறேன். மீண்டும் ஏன் வருகிறாய் என கேட்டு இரும்பு கம்பியால் சிறுமியை தாக்கியுள்ளார்.

மேலும் முகத்தில் கையால் குத்தினார். இதனால் மயங்கி விழுந்த சிறுமியை மூதாட்டி சாலையில் தூக்கி வீசியதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து மயங்கி கிடந்த சிறுமியை பார்த்த பெற்றோர் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் சிகிச்சைக்காக சிறுமி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருசக்கர வாகனம் மோதியதால் தான் சிறுமி படுகாயம் அடைந்ததாக அனைவரும் நினைத்தனர்.

இரண்டு நாள் கழித்து சிறுமி கண்விழித்து குருவம்மாள் தன்னை தாக்கியதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குறுவம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.