திருவண்ணாமலை மாவட்டம் படூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை. இந்த தம்பதியினருக்கு 17 மற்றும் 14 வயதில் 2 மகள்கள் இருந்துள்ளனர். இதில் 2- வது மகள் துர்கா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமரேசன் இறந்துவிட்டார்.

அதன் பிறகு அஞ்சலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் அஞ்சலையின் 3 மகள்களும் அவரது பெற்றோர் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி எட்டாம் வகுப்பு படித்த துர்கா தனது அக்காவிடம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்தை சாப்பிட்டு விட்டேன் எனக்கூறி மயங்கி விழுந்தார். அதன் பிறகு உயிரிழந்த சிறுமியை உறவினர்கள் ஏரிக்கரையில் புதைத்து விட்டனர்.

இந்த நிலையில் ஒரு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபர் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகம், பழங்குடியினர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களில் சிறுமியை கேலி கிண்டல் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் தான் விஷம் குடித்து இறந்தார் என புகார் கொடுத்தார்.

இதனையடுத்து எஸ் பி சுதாகர் உத்தரவின் அடிப்படையில் போலீசார் நேற்று முன்தினம் சிறுமியின் உடலை தோண்டி எடுத்தனர். பிறகு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திலேயே சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.