
சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் கட்சியின் சட்ட விதிகளை தேவைக்கேற்ப திருத்தம் செய்யலாம் என்றாலும் அவரே ஒரு விதியை மட்டும் எக்காலத்திலும் மாற்ற முடியாது என்று தெளிவாக எழுதி வைத்திருந்தார். அதாவது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் ஒன்று சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.
எம்ஜிஆர் வகுத்து தந்த விதியை மாற்றி அக்கட்சியை பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். எடப்பாடி பழனிச்சாமி விதிகளுக்கு மாறாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொண்டர்களின் மனநிலையை கருதாமல் தன்னை முன்னிலைப்படுத்தி வந்ததால் அதிமுக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. தற்போது இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முதல் முறையாக நம்முடைய தரப்புக்கு கிடைத்த வெற்றி தான் இது.
அதிமுகவில் இருக்கக்கூடிய அடிமட்ட தொண்டனும் தலைமைக்கு வரலாம் என்ற புதிய வரலாறு விரைவில் உதயமாகும். அந்த நிலை விரைவில் வரத்தான் போகிறது. அதற்காகத்தான் நாம் தொடர்ந்து தர்ம யுத்தத்தை நடத்தி வருகின்றோம். நிச்சயம் நல்ல காலம் பிறக்கும். அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இல்லாமல் போகும். காலம் கனிந்து வருகிறது சில ரகசியங்களும் அதில் நிறைந்துள்ளது. அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.