அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொம்மைகளுக்கு கடுமையான இறக்குமதி வரிகள் விதித்துள்ள நிலையில், இந்தியாவின் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க சந்தையை நோக்கி இந்தியாவில் இருந்து சுமார் 20 நிறுவனங்கள் பொம்மைகளை பெரிய அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. தற்போது மேலும் 40 நிறுவனங்கள் இந்த சந்தைக்கு ஏற்ற வகையில் தயாராகி வருவதாக பொம்மை உற்பத்தியாளர் சங்க தலைவர் அஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து அதிகமான வணிக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும், ‘வெள்ளை லேபிள்’ மற்றும் ‘original equipment manufacturing’ எனப்படும் ஒப்பந்த உற்பத்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2024-இல் 42.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அமெரிக்க பொம்மை சந்தை, 2032-க்குள் 56.9 பில்லியனாக வளரும் என கணிக்கப்படுகிறது. தற்போது, இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி உலகளவில் 1%க்கும் குறைவாக இருந்தாலும், அரசு ஆதரவுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பொம்மைகள் உலகளாவிய நிலையை எட்டும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.