தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் இயக்குனர் பேரரசு கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சினிமாவில் பாலியல் குற்றங்கள் உண்மையானதாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை சினிமா துறையில் இருந்து நீக்க வேண்டும். நடிகராக இருந்தாலும் சரி, இயக்குனராக இருந்தாலும் சரி தயாரிப்பாளர் ஆக இருந்தாலும் சரி. அனைவருக்கும் ஒரே தண்டனை தான். உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றார். அதன் பிறகு நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பேசினார். விஜய் சார் அரசியலுக்கு வந்துவிட்டார். இனிமேல் தான் அவருக்கு சோதனை வரும். அவருடைய பயணத்திற்கு முட்டுக்கட்டை போட பல அரசியல்வாதிகள் வேலை செய்வார்கள்.

எனவே இனிமேல் தான் விஜய் உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய திறமை இனிமேல் தான் நிரூபிக்கப்பட வேண்டும். அவர் அரசியலில் வருவதற்கு சினிமா புகழ் அஸ்திவாரம். அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர் பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம். அண்ணாமலை மற்றும் சீமான் போன்றவர்கள் மக்களை சந்தித்து பேசி வாக்கு வங்கிகளை சேகரித்தனர். ஆனால் விஜய்க்கு அப்படி கிடையாது ஒரே ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதும். 10% வாக்கு வங்கி கிடைத்து விடும். அண்ணாமலை போன்றவர்கள் 10 வருடங்களாக வளர்த்ததை விஜய் 10 நாட்களில் பெற்று விட்டார். மேலும் ஆட்சி அமைப்பதற்கு இது மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்று கூறினார்.